வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள் -52 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல் ஓவியா பதிப்பக வெளியீடு அண்மையில் கம்போடிய மண்ணில் வெளிடப்பட்டது. இந்நூலில் சிறப்பானதொரு அணிந்துரை நல்கிய திரைப்பட இயக்குநர் மற்றும் சிறந்த பேச்சாளருமான கவிஞர் ராசி அழகப்பன் அவர்களுக்கு தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவெனில் ஒரே நாளில் முழு மூச்சாக படித்து இயக்குனர் அவர்கள் அணிந்துரை வழங்கியது பாராட்டுக்கு உரியது மட்டுமல்ல நம் நன்றிக்கு உரியதும் ஆகும். அவருக்கு நன்றி சொல்வோம் வாரீர்....
அன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்.
Image may contain: கவிக்கோதுரைவசந்தராசன் பண்ணைத்தமிழ்ச்சங்கம், text
Image may contain: 1 person, sitting

வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்....

மிக்க மகிழ்வும் நன்றியும். தஞ்சைத் தமிழ் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் இராம வேல்முருகன், வலங்கைமான் ....அவர்களின் சிறப்பான நூல் விமர்சனம். தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றி.
....கா.ந.கல்யாணசுந்தரம்


புத்தக விமர்சனம் 
அவரை நான் பலமுறை கவியரங்கங்களிலும் ஆண்டுவிழாக்களிலும் பார்த்திருக்கிறேன். வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர். கவிதைகளின் புதிய பரிணாமங்களைப் பிடித்து வைத்து அதில் பயணிப்பவர். ஜப்பானிய ஹைக்கூ வடிவம் ஆந்திர நானிலு வடிவம் இவற்றில் அசாத்திய பயணம் செய்பவர். தமிழ் மரபுக்கவிதைகளுக்குச் சற்றும் இவைகள் சளைத்தவை அல்ல என்று வாதிடுபவர். ஒருநாள் எனது முகவரிக்கு அவரது தொகுப்பு நூலை அனுப்பியுள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொண்ட விவரம் அனுப்பவும் கேட்டுக் கொண்டார். அவர் தெரிவித்த தூதஞ்சல் காரர்கள் சரியாக புத்தகங்கள் மட்டுமல்ல கடிதங்களைக் கூட கொண்டுவந்து தராதவர்கள். எங்கே வேண்டுமானாலும் நாம் அனுப்பலாம்; பெற்றுக்கொள்வார்கள். அங்கேயெல்லாம் அனுப்புவார்களா என்றால் அனுப்ப மாட்டார்கள். நாம்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். பிரபலமான புரபசனல்கூரியர் எனப்படும் தனியார் தூதஞ்சல்நிறுவனம்தான் அது. நானே நேரில் சென்று பெற்றுக் கொண்டேன். ஆம் புத்தகத்தை அனுப்பியவர் நண்பர் மதிப்புக்குரியவர் திருமிகு கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள்.புத்தகம் வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள் இது தன் முனை க் கவிதை களின் தொகுப்பு. அது பற்றிய விமர்சனமே இது.
அருமையான அட்டைப்படம்.நம்மைப் படிக்கத்தூண்டும் வண்ணம் ஓவியா பதிப்பக வதிலை பிரபா அவர்கள் வடிவமைத்திருந்தார்.
கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. மிகப்பெரிய பணி. கவிதைகளைத் தொகுத்து வெளியிடுவது என்பது ஒரு சவாலான பணி தான். அதனைத் திறம்படச் செய்துள்ளார் நண்பர் கா ந கல்யாணசுந்தரம் அவர்கள். இந்த புத்தகம் கம்போடியாவில் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.
52 கவிஞர்களின் 780 கவிதைகளின் தொகுப்பு 232 பக்கங்கள் கொண்ட அருமையான புத்தகம். 780 கவிதைகளும் மாறுபட்ட சிந்தனைகளின் மொத்த வடிவம். கவிஞர்கள் அனுராஜ் சாரதா சந்தோஷ் இளவல் ஹரிஹரன் அன்புச்செல்வி சுப்புராஜ் ஜென்சி போன்றவர்களின் உதவியால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஒரு நூல் கூட வெளியிட முடியாத ஒரு கவிதைகூட பிரசுரம் செய்ய இயலாத கவிஞர்களின் ஆசையை ஆர்வத்தை இலக்கை ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த நூல் வெளியானது பாராட்டுக்குரியது.
நான்கு வரிக் கவிதைகள் நானிலு என்ற தெலுங்கு வடிவம். இது ஒன்றும் என்னைப் பொறுத்தவரை புதிய வடிவம் அல்ல . தமிழில் இல்லாத வடிவமா? தமிழில் இணைக்குறள் ஆசிரியப்பா என்ற ஒரு வடிவம் உண்டு. அதனையும் நான்கு அடிகளில் எழுதலாம். முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்கள் கொண்டும் இடைப்பட்ட அடிகள் இரண்டு மூன்று சீர்கள் கொண்டும் இருக்கும்.
வஞ்சித்துறை என்று ஒன்று உண்டு
இரண்டிரண்டு சீர்களாக
நான்கு அடிகள் கொண்டது
வஞ்சி விருத்தம் என்று ஒன்று உண்டு
மூன்று மூன்று சீர்களாக
நான்கு அடிகள் வருவது
இங்கே நானிலு என்ற தன்முனைக்கவிதைகள் இரண்டு அல்லது மூன்று சீர்களாக நான்கு அடிகள் வருவது.
அவ்வளவே
எழுதுபவர்களுக்கு எளிதாக
எதுகை மோனை இன்றி இயல்பாக எழுத வைக்கிறது.
அற்புதமான கவிதைகளைத் தரவல்லதாக இவை அமைந்துள்ளன.
52 கவிஞர்களும் தலா 15 கவிதைகள் வீதம் அள்ளித் தெளித்துள்ளனர் வானத்தின் மீது நட்சத்திரப்பூக்களை. அனைத்தும் வானம் தொடும் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிகின்றன. ஆரூர் தமிழ்நாடன் வதிலைபிரபா போன்றோரின் வாழ்த்துரை திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களின் அணிந்துரை புத்தக வாசிப்பைத் தூண்டுகின்றன.
52 கவிஞர்களின் கவிதைகளில் எனது கவிதைகளும் உண்டு. ( பக்கம் 144)
கவிஞர் சாரதா க சந்தோஷ் அவர்களின் கவிதைகளோடு தொடங்கி
கவிஞர்கள் அனுராஜ் கவிஞர் இளவல் ஹரிஹரன் கவிஞர் சீனு செந்தில் கவிஞர் வாசன் சாவி கவிஞர் ச ப சண்முகம் கவிஞர் வா சண்முகம் கவிஞர் ஜென்சி கவிஞர் செல்வா ஆறுமுகம் ஆகியோருடன் பயணித்து
கவிஞர் கா ந கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதைகளோடு நிறைவு பெறுகிறது புத்தகம்.
ஒவ்வொரு முகமாக
கழன்று விழ
வெளிச்சத்தில்
உண்மை முகம் (பக்.35)
அடுத்தவர் மீதான
நம்பிக்கை எப்போதும்
தன்னை நம்புவதிலேயே
தொடங்குகிறது ( பக். 42)
என்னைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்
வீட்டிற்குள்
மறந்து விட்ட உறவு ( பக்.53)
மரம் குறித்து
கவிதை ஒன்று
எழுதுகிறேன் குறிப்பேட்டில்
படபடக்கிறது தாள் ( பக். 61)
ஆடிய நாற்காலி
அசை போட உதவியது
தாத்தாவின்
ஞாபகங்களை ( பக்.103)
ஆசைக்கும்
பேராசைக்கும்
இடையே கழிகிறது
காதலின் ஆயுள் ( பக்.130)
தாவிப்பிடிக்க
முடியவில்லை
ஓடிவிடுகிறாள்
பேத்தி ( பக் 138)
இவ்வாறு நிறைய கவிதைகள் புதிய பரிமாணங்களைப் புத்தகம் முழுக்கக் காட்டுகின்றன.
தன்முனைக் கவிதைகளுக்கென்று ஒரு விதியை உருவாக்கிவிட்டு அந்த விதியைப் பின்பற்றாத கவிதைகளையும் புத்தகத்தில் தெரிவு செய்துள்ளது சற்று நெருடவே செய்கிறது.
ஒருசில கவிதைகள் ஹைக்கூ சாயல்களையும் விடுகதை சாயல்களையும் கொண்டுள்ளதும் தவிர்க்க இயலாததாகி உள்ளன.
எப்படியாகினும் வாழ்த்துவதற்கும் பாராட்டுக்கும் உரிய கவிதைகள்
"எனது காலப் பாத்திரத்தைக்
கவிழ்த்து வைக்கிறேன்
அது என்னிடம் சொல்கிறது
மீண்டும் படுக்க வைக்காதே" வித்தியாசமான சிந்தனை
"நானும் இந்த புத்தகத்தை
மூடி வைக்கிறேன்
அது என்னிடம் சொல்கிறது
மீண்டும் மூடி வைக்காதே"
அனைவரும் படிக்கலாம்
அருமையான புத்தகம்
தொகுப்பாசிரியர்
கா ந கல்யாணசுந்தரம்
62 பத்தாவது தெரு
ஜெயச்சந்திரன் நகர்
மேடவாக்கம்
சென்னை 600100
9443259288
வெளியீடு
ஓவியா பதிப்பகம்
17-13-11 ஶீராம் காம்ப்ளக்ஸ்
காந்திநகர் மெயின்ரோடு
வத்தலக்குண்டு 624 202
திண்டுக்கல்.
7667557114
விலை ரூ150/-
வாழ்த்துகளுடன்
இராம வேல்முருகன்
வலங்கைமான்