புதன், 19 அக்டோபர், 2022

துளிப்பாக்கள்

 துளிப்பா வடிவில் தத்துவத் தளிர்கள் ....

*******************************************************
* மனித மனதின்
நெடிய பயணம்
ஞானமரபுகளைத் தேடி
* நுண் அணுக்களின்
கூட்டுப் பொருட்கள்
பிரபஞ்சம்
* ஆன்மீகத் தேடலில்
மூன்று வழித்தடங்கள்
பக்தி ஞானம் தியானம்
* நவீன அறிவியலின்
சித்தாந்த ஆதாரம்
அணுவின் துகள்கள்
* ஞானத் தேடலின்
விருட்சமானது
ஜோதி தரிசனம்
* தத்துவ சிந்தனைகளின்
பிறப்பிடம்
பண்டைய வழிபாட்டு முறைகள்
* மனமே மானுடத்தின்
மூல மந்திரம்
ஒரு நிலைப்படுத்தினால்
* நிலைக் கண்ணாடி முன்
அலைபாயும் பிம்பமாய்
மானுடத் தோற்றம்
* வைதீக மரபின்
தோற்றப் பிழைகளாய்
வழிபாட்டுக் குறியீடுகள்
* தத்துவ நிலைப்பாட்டின்
நம்பிக்கையில் பிறந்தன
சாத்திரமும் சடங்குகளும்
* பொருள் தெரியாது
ஓதப்படும் வேதங்கள்
கரைசேராத ஓடங்கள்
* மதங்களைக் கடந்து
குன்றிலிட்ட விளக்கானது
தர்மம் எனும் அறம்
* புலன்வழி அறிந்த
உண்மையானது
ஆகாயம் எனும் இறையுணர்வு
* விண்வெளிக்குள் பிரவேசித்து
இரண்டறக் கலக்கும் ஆன்மா
முக்தி நிலையின் மூலம்
........கா.ந.கல்யாணசுந்தரம்





ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிதறாத வாழ்வியலின் கூர்மை

 சிதறாத வாழ்வியலின் கூர்மை 

+++++++++++++++++++++++++++++++

துள்ளியெழும் சொற்களுக்குள் இளமை 

துவளாதப்  பொருளிருக்கும் வளமை 

நெஞ்சினிக்கும் நிகழ்வுகளில் புதுமை 

நினைவிருக்கும் எந்நாளும் பெருமை 


கொஞ்சும் மொழியாளுகின்ற திறமை 

குவலயத்தின் கோபுரமாய் தாய்மை 

மனிதநேயம் வளர்த்தெடுக்கும் கடமை 

மண்மீது தழைத்தோங்கும் பெண்மை 


முடியாளும் பெருமையிலே கருமை 

முன்னெடுக்கும் மாந்தரின் முதுமை 

கனிவான பேச்சாலே தனிமை  

இனியோடும் என்பதே உண்மை 


உவமையோடு உலாவரும் புலமை 

ஒப்பற்றத் தமிழரின் உடைமை 

தெடர்ந்துவரும் பொல்லாத வறுமை 

துரத்திடவே துணிந்தெழும்  வலிமை  


நாடெங்கும் நற்பயிராய் நன்மை 

நனிசிறக்க களைந்திடுவோம் தீமை 

திறன்மிகு செயலாலே உண்மை 

தென்றலென நமையாளும் குளுமை 


கள்ளமனம் கொண்டாடும் சிறுமை 

காலத்தால் நிலைக்காத வெறுமை 

சிந்தித்துச் செயலாற்றும் ஆண்மை  

சிதறாத வாழ்வியலின் கூர்மை 


………கா.ந.கல்யாணசுந்தரம்